1. சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பயனற்றுப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
2. நீங்கள் அறிந்திருப்பதுபோல், உங்களிடம் வருவதற்கு முன்னர் பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம், அவமானத்துக்கு ஆளானோம். ஆயினும் பெரும் போராட்டத்தினிடையிலும் கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம்.
3. எங்கள் அறிவுரைகள் ஏமாற்றத்தினாலோ, கெட்ட கருத்தினாலோ கபட எண்ணத்தினாலோ தூண்டப்பட்டவை அல்ல.
4. நாங்கள் தகுதியுள்ளவர்களெனக் கடவுளே எங்களை நம்பி, நற்செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப நாங்கள் அதை அறிவிக்கிறோம். மனிதருக்கு அல்ல, எங்கள் உள்ளங்களை உய்த்துணரும் கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம்.
5. நாங்கள் ஒருகாலும் இச்சகமாகப் பேசியதேயில்லை; இது உங்களுக்குத் தெரியும். போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை.
6. கடவுளே இதற்குச் சாட்சி, நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்று பெருமை கொண்டிருக்க முடியும். 'ஆனால், மனிதர் தரும் மகிமையை நாங்கள் உங்களிடமோ மற்றவர்களிடமோ தேடவில்லை.
7. மாறாக, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளப்பதுபோல் உங்களிடையே அன்பாய் நடந்து கொண்டோம்.
8. உங்கள் மீது இத்தகைய ஏக்கமுள்ளவர்களாய் உங்களுக்குக் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்று, எங்களை முழுவதுமே கையளிக்க ஆவலாய் இருந்தோம். உங்கள் மேல் எங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தது!
9. ஆம் சகோதரர்களே, நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைவு கூருங்கள். உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவித்தோம்.
10. விசுவாசிகளான உங்கள் முன்பு நாங்கள் எவ்வளவு புனிதராய், நீதியோடு, குற்றமின்றி நடந்தோம் என்பதற்கு நீங்களே சாட்சி, கடவுளும் சாட்சி.
11. தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போல், உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தினோம். 'ஊக்கமூட்டினோம்.
12. தம் அரசுக்கும் மாட்சிமைக்கும் உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்க வாழுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
13. நாங்கள் அறிவித்த கடவுளுடைய வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொண்டபோது அதை மனித வார்த்தையாக ஏற்றுக்கொள்ள வில்லை; கடவுள் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக இடைவிடாது கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். உள்ளபடியே அது கடவுளுடைய வார்த்தைதான். அதுவே விசுவசிக்கும் உங்களுக்குள் செயலாற்றுகிறது.
14. சகோதரர்களே, யூதேயாவில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழும் இறைமக்களின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்பங்களுக்கு ஆளானதுபோல் நீங்களும் உங்கள் சொந்த இனத்தாராலே அதே துன்பங்களுக்கு ஆளானீர்கள்.
15. அந்த யூதர்களே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினர்களையும் கொலை செய்தார்கள். எங்களையும் துன்புறுத்தினார்கள். அவர்கள் கடவுளுக்கு ஆகாதவர்கள், மனுக்குலத்துக்கும் எதிரிகள்.
16. ஏனெனில், புறவினத்தார் மீட்ப்பு ¢ பெறும்படி நாங்கள் அவர்களிடம் பேசுவதையும் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவங்களின் அளவை நிரப்புகிறார்கள். இறுதியாய் இறைவனின் சினம் இதோ அவர்கள்மேல் வந்துவிட்டது.
17. சகோதரர்களே, சிறிதுகாலம் உங்களை விட்டுப் பிரிந்து தவித்தோம் - உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை - உங்கள் முகத்தைப் பார்க்க மிக்க ஆவலாய் ஏங்கி இருந்தோம்.
18. உங்களிடம் வரவிரும்பினோம். அதுவும் பல தடவைகளில் சின்னப்பன் நான் உங்களிடம் வர எண்ணங்கொண்டேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான்.
19. நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகையின்போது, நாம் அவர் திருமுன் நிற்கையில் எங்களுக்கு நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ, பெருமைக்குரிய வெற்றி வகையோ உங்களைத் தவிர வேறு உண்டோ?
20. நீங்களே எங்கள் மகிமை; நீங்களே எங்கள் மகிழ்ச்சி.